tamilnadu

img

தினம்தோறும் 3,000 பேருக்கு கொரோனா சோதனை செய்திடுக...

மதுரை:
மதுரையில் தினந்தோறும் 3,000 பேருக்கு கொரோனா தொற்றுபரிசோதனை நடத்த வேண்டும். மதுரையில் தொற்று வேகத்தைகட்டுப்படுத்த, ஆலோசனைகள் வழங்க தனி சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளிலிருந்து வந்திருப்பவர்களை வீட்டுத் தனிமையில் வைக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் பிரதிநிதிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்பி.மூர்த்தி (திமுக), திருப்பரங்குன்றம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் (திமுக) ஆகியோர்ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் அரைமணி நேரம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் கூறியதாவது,“மதுரையில் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு குறைந்தது சுமார் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சென்னை பகுதியிலிருந்து  சுமார் 30 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்களில் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 25 ஆயிரம் பேரை வரும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்க வேண்டும்.

ஜூன் 7-ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவிப்பில் 14 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மதுரை ஆட்சியரோ 16 ஆயிரத்து 220 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார். இந்த வித்தியாசம் 20 சதவீதமாக உள்ளது. சோதனை விபரத்தையே 20 சதவிகிதம் குறைத்து காண்பித்தால், தொற்று உறுதியானவர்கள் மற்றும்மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை யும் இதே போல குறைத்து தான்காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டும்.

சென்னை கொரோனா பரவலிலிருந்து மதுரை மாவட்டம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சென்னைக்கு அடுத்த பிரதான நகரம் மதுரை. இதைச் சுற்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன. மதுரைக்கு ஒரு தனி சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை நியமித்து கொரோனா பரவல் தடுப்பு,முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை துரிதப்படுத்த வேண்டும். கொரோனாதொற்று சோதனையில் தமிழகத்தில் மதுரை 30-ஆவது இடத்தில் உள்ளது . இது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. மொத்தமுள்ள38 மாவட்டங்களில் 30 ஆவது இடம் என்பது சோதனை மிகக்குறைந்த அளவே நடத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.சோதனை எண்ணிக்கையின் அடிப்படையில் மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்த இரண்டு நாட்களுக்கே போதுமான மருத்துவக்கருவிகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், திமுக மதுரை மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் கோ.தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, வேலுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அலங்கை செல்வரசு, கதிரவன், மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா. பூமிநாதன், கதிரேசன், மார்நாடு, மகபூப்ஜான், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் சரவணன், பா.காளிதாஸ் உள்ளிட்ட திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சி யின் தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் ஆகியோர் மதுரை மருத்துக்கல்லூரி முதன்மையர் சங்குமணியை சந்தித்து பிபிஆர்,பிசிஆர் கருவிகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்தும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மக்கள் பிரதிநிதிகளிடம் பேசிய,மருத்துவ முதன்மையர் சங்குமணி, தகுந்த பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சிகிச்சையளிப்பதாகக் கூறினார். கொரோனா சோதனை கருவிகள் போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாகவும் கூறினார்.

;